திஹார் சிறை கொடுமை: “என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்… ! நான் தீவிரவாதி அல்ல!”

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்து திஹார் சிறை அடைத்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பஞ்சாப் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மான் திஹார் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். இரு தலைவர்களும் இன்டர்காம் மூலம் பேசியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பகவந்த் மான் பேசுகையில், “சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட கெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவரைப் பார்த்து நான் உணர்ச்சி வசப்பட்டேன்.

“திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மோசமாக நடத்தப்படுகிறார். ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு கூட அவரது மனைவியையும், வழக்கறிஞரையும் வராண்டாவில் வைத்து சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், கெஜ்ரிவால் கண்ணாடி தடுப்பின் பின்னால் இருந்தே பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானை சந்தித்தார். அப்போது பகவந்த் மானிடம் கெஜ்ரிவால் தனக்கு சிறையில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அந்த வேதனையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், கெஜ்ரிவால் ஒரு தகவல் அனுப்பியுள்ளார். “என் பெயர் கெஜ்ரிவால். நான் தீவிரவாதி அல்ல” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்” என பகவந்த் மான் பேசினார்.