திருமாவளவன்: இசைவாணி பிரச்சினை அதானி விவகாரத்தை திசை திருப்ப..!

அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் அப்படி இல்லை எனவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு முன்மொழிவும் வரவில்லை என மத்திய பாஜக அரசு மறுதலித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

குளிர்கால கூட்டத் தொடரில் அதானி பிரச்சினை, உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்சினை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. பாஜகவால் கொண்டு வரப்படும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முறியடிக்க முயற்சிப்போம். இதற்கான செயல்திட்டங்களை இண்டியா கூட்டணி கட்சியினர் வரையறுப்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் இடையேயான விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அரசு அதை பார்த்துக் கொள்ளும். மதத்தையோ, மத உணர்வையோ காயப்படுத்தும் நோக்கில் இசைவாணி பாடவில்லை. அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றனர். இது ஏற்புடையதல்ல. இசைவாணியை கைது செய்ய வேண்டும் எனக் கூறுவது கண்டனத்துக்குரியது” என திருமாவளவன் தெரிவித்தார்.