நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்.
உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் அவர் பேசுகையில், மீண்டும் மக்களவையில் ரவிக் குமாரின் குரல் ஒலிக்க வேண்டும். ரவிக் குமாரின் வெற்றி முதல்வருக்கு கிடைக்கும் வெற்றி; இண்டியா கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றி. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு பறந்து சென்றதுதான் மோடியின் சாதனை. அம்பானி, அதானியை உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னிலையில் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. ஆனால் மக்களுக்காக என்ன செய்தார்?
பாஜக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். தொடர்ந்தால் பேராபத்தை நாட்டுமக்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல் சட்டத்தை நீர்த்துபோக செய்துவிடுவார்கள். அண்ணாமலை நாள்தோறும் பொய் பேசி வருகிறார். அரசியல் காமெடியன் அண்ணாமலை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவை காப்பற்ற வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கத்தை நிறைவேற்ற 40 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும். அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கட்சிகளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை கொடுக்க வேண்டும் என திருமாவளவன் பேசினார்.