தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23 ஆம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 30 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் நரிக்குறவர் மற்றும் சீரமரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
மேலும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டிகளின் எண்ணிக்கையினை 2,000-லிருந்து 3,000 ஆக உயர்த்தி 48 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மானவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் மற்றும் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் மூலம் அளிக்கப்படும் போன்ற முக்கியமான தகவல்களை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளிட்டார்.