திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலின் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துள்ளதாகக் கூறிய கருத்தால், அரசு நிர்வாகங்களுக்கு நெருக்கடி கிளம்பியுள்ளது. இதையடுத்து இந்துத்துவா அமைப்புகள் ஆந்திர அரசிடமிருந்து கோயில்களை மீட்கும் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன.
இது குறித்து விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளரான பஜ்ரங் பக்தா வெளியிட்ட வீடியோவில், கோயில்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதுதான் திருப்பதி லட்டு விவகாரத்துக்கு காரணம். எனவே, ஆந்திரப்பிரதேச அரசு உடனடியாக வெங்கடாஜலபதி கோயில் நிர்வாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோல், நாட்டின் அனைத்து கோயில்களும், மடங்கள் மற்றும் புனிதத்தலங்களும் அரசின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். திருப்பதி விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
இந்த பிரச்சினையால் நாங்கள் நீண்ட நாளாக வலியுறுத்தும், அரசுகளிடமிருந்து கோயில்கள் மீட்பு என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. கோயில்களின் நிர்வாகத்தை வைத்து ஆட்சி செய்யும் அரசுகள் அரசியல் செய்கின்றன. அரசால் அமர்த்தப்படும் இந்து அல்லாத நிர்வாகிகளால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு, மத்திய அரசிடம் கலந்துபேசி முடிவு எடுக்கும் என நம்புகிறோம் என பஜ்ரங் பக்தா வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.