திடீரென சாய்ந்த மெட்ரோ ரயில் தூண் கம்பிகளால் பூவிருந்தவல்லியில் பரபரப்பு..!

சென்னை பூவிருந்தவல்லியில் 30 அடி உயர தூணின் கம்பிகள் பாரம் தாங்காமல் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் 2 -ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த ரூ. 63,246 கோடி செலவில் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்று வழித்தடங்களைக் கொண்ட மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் 2020 ஆண்டு இறுதியில் தமிழக அரசு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி மாதவரம் – சிறுசேரி வரை 45.4 கி.மீ 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூவிருந்தவல்லி வரை 26.1 கி.மீ 4-வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வழிதடங்களில் தற்போது, பல்வேறு இடங்களில் உயர் மட்டப்பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயிலுக்காக கட்டுமான பணியில் 30 அடி உயர தூணின் கம்பிகள் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக கட்டுமானப் பணி நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று காற்று அதிகம் வீசியபோது திடீரென கம்பிகள் மொத்தமாக வளைந்ததாக கூறப்படுகிறது.

கம்பிகள் திடீரென வளைந்து தொங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தனை தொடர்ந்து அபாயத்தை உணர்ந்து சாய்ந்த கம்பிகளை நிலைநிறுத்த 2 ராட்சத கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கம்பிகளை நிமிர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பூவிருந்தவல்லியில் கம்பிகள் பாரம் தாங்காமல் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.