கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளர்.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மற்றும் அண்ணா பேருந்து நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விழிப்புணர்வு பதாகைகளை விற்பனையாளர்களிடம் வழங்கி தெரிவிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவு இளைஞர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், போதைப்பொருட்களுக்கு அடிமையாகி சமூக சீர்கேடுகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். வளரும் இளம் சமுதாயத்தினரை மீட்டு எடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்திடும் வகையிலும், சமூக சீர்கேடுகளுக்கு ஆளாகமால் சமுக பொறுப்பாளர்களாக உருவாக்கிடும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக போதையில்லா கன்னியாகுமரி மாவட்டத்தினை உருவாக்கிட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் இணைந்த 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுக்கள் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர பகுதிகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப்பொருட்களான பான்மசாலா, குட்கா, உதட்டிற்குள் வைக்கும் புகையிலை மற்றும் மெல்லும் வாய் புகையிலை முதலியன விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நவம்பர் 2023 முதல் செப்டம்பர் 2024 வரை 11 மாதங்கள் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்களான பான்மசாலா, குட்கா, மற்றும் மெல்லும் வாய் புகையிலை ஆகியவற்றை விற்பனை செய்த 304 உணவு வணிகர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் கடைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டு 15 நாட்கள் மூடி முத்திரையிடப்பட்டது. அதன் பின்னர் தலா ரூ.25000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.42.65 லட்சம் வசூல் செய்யப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறை வாயிலாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் உணவு பாதுகாப்புத் துறையின் வாயிலாக முதல் முறையாக கண்டறியப்படும் கடைகளை 15 நாட்கள் மூடி முத்திரையிடப்படுவதோடு, ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையாக கண்டறியப்படும் கடைகளை 30 நாட்கள் மூடி முத்திரையிடப்படுவதோடு, ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். 3-வது முறையாக கண்டறியப்படும் கடைகளை 90 நாட்கள் மூடி முத்திரையிடப்படுவதுன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 முறைக்கு மேல் தவறு செய்பவர்கள் மீது காவல் துறை மூலம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்படும்.
சிறுவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் உதட்டிற்குள் வைக்கும் புகையிலை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் பொதுமக்கள் குழந்தைகள் உதவி எண் 1098-ல் புகார் அளிக்கலாம். இதுகுறித்த புகார்கள் இருந்தால் அதனை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் புகார் எண் 9444042322 என்ற எண்ணுக்கும் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலக எண் 04652 276786 என்ற எண்ணிற்கும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.” என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்தார்.