தடியடி திருவிழாவில் விடிய விடிய மோதல் 70 பேர் படுகாயம்..!

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையை முன்னிட்டு பன்னி திருவிழா நடைபெறும். அப்போது, தேவரகட்டு கிராம மலை மீது உள்ள மாளம்மா-மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நள்ளிரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர் சுவாமி திருவீதி உலா நடைபெறும். அப்போது சுவாமி சிலையை தங்கள் ஊருக்கு எடுத்து செல்வதில் கிராம மக்கள் இடையே சண்டை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், சுவாமி சிலையை தங்கள் ஊர்களுக்கு கொண்டு செல்வதற்காக நேரணி, நேரணிகிதண்டா, கொத்தப்பேட்டை கிராம பக்தர்கள், அரிகேரா, அரிகெரதண்டா, சுளுவாய், எல்லார்த்தி, குருகுந்தா, பிலேஹால், விருபாபுரம் ஆகிய கிராம மக்கள், பெரிய அளவிலான தடிகளுடன் திரண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

நேற்று நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடந்த சண்டையில் 70-க்கும் மேற்பட்டோரின் மண்டை உடைந்து, உடலில் ஆங்காங்கே படுகாயமடைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிக்சை அளித்து வருகின்றனர்.