டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஜ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைமை செயலகத்துக்கு செல்ல கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார்.
நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாட்களில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக திடீரென அறிவித்தார். மக்கள் என்னை நேர்மையானவர் என கருதி மீண்டும் வெற்றி பெற வைத்தால் மட்டுமே முதலமைச்சர் நாற்காலியில் அமருவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதாக அறிவித்ததால் டெல்லி புதிய முதலமைச்சர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. புதிய முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகள் கோபால் ராய், அதிஷி, சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் உள்ளிட்டவர்கள் பெயர்களும் அடிப்பட்டது.
டெல்லி புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதால் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ராகவ் சதா ஆகியோர் நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், மந்திரிகள் மற்றும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். ஒவ்வொரு தலைவர்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் தனித்தனியாக சந்தித்து பேசினார். அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
இன்று 2-வது கட்டமாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது இல்லத்தில் மீண்டும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பகல் 11.30 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 57 பேரும் கலந்து கொண்டனர். இதில் முதலமைச்சர் பதவிக்கு கல்வி மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்து வரும் அதிஷி மர்லினா பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார். இதனை எம்எல்ஏக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகல் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. டெல்லி சட்டசபைக்கு அடுத்து ஆண்டு 2025 தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.