ரூ.200 ஜிபே செலுத்தினால் பிறப்பு, சாதி சான்றிதழ் கிடைக்கும் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பிரபா கனி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பகுதியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கையூட்டு பெறப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலக காம்பவுண்ட் சுவரில் மர்மநபர்கள் திடீரென போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலை பட்டியல் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெற ரூ.200 ஜிபே செலுத்தவும். 20 நாட்களில் சான்றிதழ் கிடைக்கும்.
ஜிபே ஏற்றுக் கொள்ளப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கு கட்டணம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திடீர் போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.