சோழ மண்டலம் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற சயன் வங்கதேசத்தை சேர்ந்தவரா..!?

கடனை தாமதமாக கட்டியதால் 7 வீடுகளை பூட்டி மின் இணைப்பை துண்டித்த சோழமண்டலம் பைனான்ஸ் அடாவடி செய்த வீட்டில் உரிமையாளர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

சமீபத்தில், சென்னை குன்றத்துார் மற்றும் மாங்காடு பகுதியில்,வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் சட்ட விரோதமாக தங்கி இருந்துள்ளனர்.. பெரியவர்கள் 25 பேர் 8 குழந்தைகள் என 33 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பெரியவர்கள் 25 பேரையும் ழல் சிறையிலும் 8 குழந்தைகளை காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, நேற்றைய தினமும் பூந்தமல்லி அருகே அகரமேல் கிராமத்தில் சட்டவிரோதமாக 3 வருடங்களுக்கு மேலாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் சயன் என்பவர் தனது மனைவி கீதா என்பவருடன் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் உள்ள சோழ மண்டலம் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை விரிவுபடுத்தபத்திரத்தை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சயன் உடல் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் அவரால் கடனை செலுத்த முடியவில்லை. சென்னையில் இருந்து திரும்பிய சயன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 மாத கடன் தொகையை செலுத்தி இருக்கிறார். ஆனால் அந்தத் தொகை செயலாக்க கட்டணத்திற்கு சரியாகிவிட்டதாக கூறி நேற்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் எனக் கூறி 30 பேர் சயன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள், சயன் வீடு மற்றும் அவர் வாடகைக்கு விட்டிருந்த 6 வீடுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி மின் இணைப்பையும் துண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த சயனின் மனைவி கீதா எலி மருந்தை குடித்து உயிரைவிட முயற்சிக்க , அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, சீல் வைக்கப்பட்ட வீடுகளில் வாடகைக்கு குடியிருந்தவர்கள், இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுதான், சீல் வைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர் சயன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த 20 வருடங்களாகவே சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரிய வந்தது.. இதுகுறித்து சிகிச்சை பெற்று வரும் சயனிடம் காவல்துறை இதுகுறித்து கேட்டார்கள்.. அப்போது சயன், “வங்க தேசத்திலிருந்து வந்து, திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டேன். மனைவியின் ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகளை பெற்றுள்ளேன்.. அதேபோல, குடியுரிமை பெறுவதற்கு ரூ.15 லட்சம் வரை செலவழித்திருக்கிறேன். இதுவரை குடியுரிமை கிடைக்கவில்லை” என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.