காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தோட்டம் தெரு பகுதியை சேர்ந்த சுந்தர் தனது பெயரில் உள்ள 460 சதுர அடி நிலத்தை தனது மகன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்தார். இந்நிலையில் காஞ்சீபுரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி மகன் பெயரில் மாற்றம் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். நீண்ட நாட்களாக பெயர் மாற்றம் செய்யாமல் அலைக்கழித்ததால் மாநகராட்சி அலுவலகத்தில் பில் ஆட்சியர் ரேணுகாதேவியிடம் கேட்டபோது, ரூ.15 ஆயிரம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தருவதாக தெரிவித்தார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை, முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி ரூ.5 ஆயிரம் தருவதாக கூறுமாறு தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை சுந்தரிடம் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட ரேணுகாதேவியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி மநாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற சுந்தர், பில் ஆட்சியர் ரேணுகாதேவிக்கு போன் செய்தபோது, ஆலடிதோப்பு பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் அங்கு வருமாறு தெரிவித்தார். அங்கு சென்று ரேணுகாதேவியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை சுந்தர் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரேணுகாதேவியை கையும் களவுமாக பிடித்தனர். அதன்பின்னர் ரேணுகாதேவியை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.