சேவல் சண்டையில் சண்டையே போடாமல் கடைசி வரை களத்தில் நின்ற வேடிக்கை பார்த்த சேவல் வெற்றி பெற்றதாக அறிவிப்பு சேவலின் உரிமையாளருக்கு ரூ.1.25 கோடி பரிசாக அளிக்கப்பட்டது. ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கோதாவரி மாவட்டம், என்.டிஆர், கிருஷ்ணா, ஏலூரூ உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த போட்டிகளுக்கு நுழைவு கட்டணம் பெற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு இணையாக சேவல் சண்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த சேவல் சண்டையில் ஒரு வட்டத்தில் ஐந்து சேவல்கள் சண்டைக்கு விடப்பட்டது. இதில் நான்கு சேவல்கள் போட்டியிட்டு சண்டையிட்டது. ஆனால் ஒரு சேவல் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் ஒதுங்கி நின்றது. இதற்கிடையில், மற்ற நான்கு சேவல்களில் முதல் இரண்டு சேவல்கள் சண்டையிட்டு அதன் கால்களில் கட்டப்பட்ட கத்தியில் வெட்டுப்பட்டு இறந்தன.
மேலும் இரண்டு சேவல்கள் சண்டையிட்டு முதலில் ஒன்று சரிந்து விழுந்து இறந்தது. இதில் உயிர் பிழைத்த சேவல், ஆரம்பத்தில் இருந்து ஒதுங்கி நின்ற சேவலுடன் சண்டையிடும் என்று நினைத்த பார்வையாளர்கள் பரபரப்பாக பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் சில நொடிகளிலேயே அதுவரை நன்றாகச் செயல்பட்டு வந்த நான்காவது சேவலும் சரிந்து விழுந்து இறந்தது. இதனால் சண்டையிடாத சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதுவும் செய்யாமல் பந்தயத்தில் வென்ற சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு கிடைத்தது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.