சுனிதா கேஜ்ரிவால்: மக்களவைத் தேர்தல் வரை கேஜ்ரிவாலை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பை கோரவில்லை. அதேநேரத்தில், “கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். அவருடைய டிஜிட்டல் உபகரணங்களின் கடவுச் சொற்களைத் தர மறுக்கிறார்.

ஆகையால் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்” என்று அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து கேஜ்ரிவாலை வருகிற ஏப்ரல் 15 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றைய விசாரணையின்போது ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா கேஜ்ரிவால், “அமலாக்கத் துறையின் விசாரணை முடிவடைந்துவிட்டது. அவர் குற்றம் இழைத்தார் என நீதிமன்றம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது ஏன் அவரை சிறையில் அடைக்க வேண்டும்? மக்களவைத் தேர்தல் வரை கேஜ்ரிவாலை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்” என சுனிதா கேஜ்ரிவால் தெரிவித்தார்.