“அடிமை வாழ்வினும் உரிமைச்சாவு மேலானது!”, “சரணடைந்து வாழ்வதை விடச் சண்டையிட்டுச் சாவதே மேலானது!” என்று தான் எம்மின முன்னோர்களின் வரலாற்று வழித்தடங்கள் எங்களுக்குக் கற்பிக்கின்றன என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெருமிதம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 223-வது நினைவு நாளையொட்டி அவர்களது உருவப் படத்துக்கு ஆளுநர், அமைச்சர்கள், தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், அன்னைத்தமிழ் நிலம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைபட்டு விடக்கூடாது என்பதற்காக வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, இழந்த நிலத்தை மீட்டெடுத்த எங்கள் வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியார் அவர்களின் வீரமிகு வெற்றித்தளபதிகளாகத் திகழ்ந்தவர்கள் எங்கள் பாட்டன்கள் பெரிய மருதுவும், சிறிய மருதுவும்.
பிறகு பாட்டியார் ஓய்வை நாடியபோது, இந்நாட்டைப் பாதுகாக்க மருது இருவரை விட்டால் வேறு எவர் இருக்கிறார் என்று பெருநம்பிக்கையுடன் மக்களிடத்திலே எடுத்துரைத்து, அவர்களிடத்திலே நாட்டை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள்.
சிவகங்கைச்சீமையின் காளையார்கோயிலைக் களமாகக் கொண்டு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர்கள் மருதிருவர்கள் நடத்திய ஆகச்சிறந்த ஆட்சியில் ஏரும், போரும் சிறந்தோங்கியது எனவும், 200 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் மிகச் சுவையான ஆரஞ்சு பழங்கள் விளைவிக்கப்பட்டன என்பதும் வரலாறு!
ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜம்புத்தீவு பிரகடனத்திலே எங்கள் பாட்டன் சிறிய மருது “எவனுக்கு ஐரோப்பிய இரத்தம் ஓடவில்லையோ, அவனெல்லாம் என்னோடு போருக்கு வா!” என்று அறைகூவல் விடுத்து, படையை நடத்தி போகும்போது விடுதலை உணர்வோடு உழைக்கும் உழவர் குடிமக்கள் பலரும் படையில் திரண்டு பெரும்படையாக உருவெடுத்ததனால் தான் 150 நாட்கள் இடைவிடாமல் வீரப்போரிட்டுள்ளனர்.
இறுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு, கைது செய்யப்பட்டபோது, மண்டியிட மறுத்து தூக்குக் கயிற்றைத் துணிந்து ஏற்றவர்கள் எங்கள் மருதிருவர்கள்! “அடிமை வாழ்வினும் உரிமைச்சாவு மேலானது!”, “சரணடைந்து வாழ்வதை விடச் சண்டையிட்டுச் சாவதே மேலானது!” என்று தான் எம்மின முன்னோர்களின் வரலாற்று வழித்தடங்கள் எங்களுக்குக் கற்பிக்கின்றன. அதே வழியில் தான் எங்கள் தலைவரும் கிளர்ந்தெழுந்து எம்மின விடுதலைக்குப் புரட்சி செய்தார்.
அதனால் தான் “ஒரே இரத்தம்! அதே வீரம்!” என்று நாங்கள் முழங்குகிறோம்!
இன்று எங்கள் நிலமெங்கும் மலை வளம், நில வளம், மணல் வளம், நீர் வளம், கனிம வளம் என அனைத்தும் கண்முன்னே களவு போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலத்தைக் காக்க எங்கள் முன்னோர்கள் செய்த உயிரீகங்கள் வீணாகாமல் இருக்க, களத்தில் நின்று போராடி மீட்டு அடுத்தத் தலைமுறைக்குப் பாதுகாப்பாகக் கையளிப்போம் என்கிற உறுதியை வீரப்பெரும்பாட்டன்களின் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில் ஏற்போம்.
உலகத்தமிழ் மக்களின் உணர்வோடு இணைந்து நம் வீரப் பெரும்பாட்டன்கள் மருது பாண்டியருக்கு நம்முடைய வீரவணக்கத்தைச் செலுத்துவோம்! என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.