சீமான்: சாலை நடுவே நின்னா லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி..!

சாலை நடுவே நின்னா லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக தாக்கி சீமான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் விஜய் பேசும்போதும் பல தரப்பினரையும் தாக்கி பேசினார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் பேசிய சீமான், தம்பி இது பன்னாட்டு புரட்சி தம்பி, என் மூதாதையர், முப்பாட்டனின் தோளில் இருந்த பணப்பையை அறுத்துக் கொண்டு ஓடி விட்டாய், இந்த தலைமுறை பேரனும் பேத்தியும் விரட்டியடித்து அதை பறிக்கின்றோம். நான் குட்டிக்கதை சொல்பவன் இல்லை தம்பி, வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்கவேண்டும்.

நாங்கள் அதை படித்து பிஎச்டி பட்டம் வாங்கி விட்டோம். நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேடவேண்டும். சங்க இலக்கியத்தில் வருகின்ற பாண்டியர் நெடுஞ்செழிய மன்னனின் பேரனும் பேத்தியும் நாங்கள். அது கதை அல்ல, எங்கள் இனத்தின் வரலாறு. எங்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு புரட்சி முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு, அன்பு என்றால் அன்பு, வம்பு என்றால் வம்பு.

நீங்கள் வெட்ட அருவாளை ஓங்கினால் விழுந்து கும்பிட மாட்டோம், வெட்ட நினைக்கும் போதே வெட்டி விடுவோம். தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, கூமுட்டை. சாலையில் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்த ஓரத்தில் நில், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிகவும் கொடு நிலை. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ… நான் கருவிலேயே என் எதிரி யார் என தீர்மானித்துவிட்டு பிறந்தவன்.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் இல்லை. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி…இது நெஞ்சு டயலாக். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.

வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார்? என்று சொல்லு தம்பி. சத்தமாக பேசும் நான் வரவில்லை என்றால் வேலு நாச்சியார். அழகு முத்துக்கோன், அஞ்சலை, சேர, சோழ பாண்டியர் யார் என்று தெரியாது, நீங்க வைத்துள்ள கட் அவுட்டுகள் எல்லாம் நான் வரைய வைத்த படங்கள். தீரன் சின்னமலையை சங்க இலக்கியத்தில் படிக்கக்கூடாது தம்பி. வரலாற்றில் படிக்க வேண்டும். அவன் மன்னன் இல்லை, விவசாய குடும்பத்தில் பிறந்த எளிய மகன். திப்பு சுல்தானின் படையை விரட்டி அடித்தவன். வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தம்பி என சீமான் பேசினார்.

விஜய் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்று கூறியது குறித்து பல உதாரணங்களை பேசி கிண்டல் அடித்த சீமான் ஒவ்வொரு பேச்சு முடிந்த பின்பும் தம்பி, தம்பி எனக்கூறி விஜயை சகட்டு மேனிக்கு கலாய்த்தார். அப்போது தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர். இந்த சீமானின் பேச்சுக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.