சீமான் கேள்வி: கார் பந்தயம் நடத்த மட்டும் அரசிடம் பணம் இருக்கா..!?

“ரூ.250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடாக இல்லையா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

பள்ளிக்கல்வித் துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1-ம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150-ன் படி, தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டைச் சீர்குலைக்கும் திமுக அரசின் இந்நடவடிக்கை எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 1997-ம் ஆண்டு அரசாணை 525-ன் படி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 250-க்கு அதிகமாகும்போது ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் என ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாகும் போது, அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்குப் பதிலாக, ஓர் உடற்கல்வி இயக்குநர் பணியிடமாகத் தரம் உயர்த்திடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று இருந்த நிலையிலேயே, மாணவர்களுக்கு முழுமையான உடற்திறன் பயிற்சி அளிக்க முடியாத நிலையில், தற்போது 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று மாற்றுவது எவ்வகையில் நியாயமாகும்? அதிலும், தற்காலத்தில் அலைபேசி மற்றும் கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவ சமுதாயத்தின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்தைப் பேணவும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, குறைப்பதென்பது தமிழக அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.

இப்படி ஏழை மாணவர்களுக்கான கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துதான் அரசு தன்னுடைய நிதிநிலையைச் சீர் செய்ய வேண்டுமா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்க நிதி இருக்கும் திமுக அரசிடம், படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லையா? மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, கற்பிக்கும் ஆசிரியரைக் குறைத்து அவர்களின் கல்வியை நிறுத்துவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

ரூ.250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் தமிழகத்தில் விளையாட்டுத் துறையை உலகத் தரத்துக்கு வளர்த்திடும் முறையா? கார் பந்தயத்தில் எத்தனை தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர்? எத்தனை ஏழைக்குழந்தைகள் அதனால் பயன்பெற்றனர்? ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கத்தையாவது இந்த ஆடம்பர கார் பந்தயத்தால் வாங்கித் தர இயலுமா? கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் ஆட்குறைப்பு செய்கின்ற அவலநிலையின் மூலம், மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் பல்லாயிரம் கோடிகள் அந்நிய முதலீடுகளைக் குவித்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டோம் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் மார்தட்டுவது அனைத்தும் பச்சைப்பொய் என்பது உறுதியாகிறது. அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், தரமான கல்வியை வழங்கத் தவறியதாலும் நிகழும் கொடுமையாகும்.

அதனைச் சரி செய்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல், அதனையே காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களைக் குறைப்பதென்பது அரசின் அறிவார்ந்தச் செயல் ஆகாது.ஆகவே, அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, பழைய நிலையே தொடர உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.