தேர்தல் வியூக வகுப்பாளரை நாடுவது சமீபமாக ஏற்பட்டிருக்கும் நோய், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வரும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். ஏற்கனவே தவெகவுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு அணிகள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பை விஜய் நேற்று வெளியிட்டார்.
அதேபோல் தவெக தலைவர் விஜய் உடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார். 2 முறை நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு பின் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சிறப்பு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி இருக்கிறார். இதனால் பிரசாந்த் கிஷோர் உடன் தவெக இணைவது அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு அரசியல் கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், இந்த சந்திப்பு நடந்தது என்று செய்திகளை பார்த்தே தெரிந்து கொண்டேன். வியூக வகுப்புகளில் எல்லாம் பெரிதாக நாட்டமில்லை. இந்த நாட்டை ஆட்சி செய்த காமராசர், அண்ணா உள்ளிட்டோர் வியூக வகுப்பாளருடன் போட்டியிட்டனர்.
எங்கு என்ன செய்யலாம் என்ற அறிவு அவர்களுக்கு இருந்தது. இதற்கு தேர்தல் வியூக வகுப்பாளர் தேவையென்றால், எதற்காக அரசியலுக்கு வர வேண்டும். அரியலூர், பெரம்பலூரில் யாரை நிறுத்தினால் வெல்லலாம் என்பது நமக்கு தெரிய வேண்டும். என்னிடம் மூளை இருக்கிறது. பணம்தான் என்னிடம் இல்லை. கத்திரிக்காய் என்று பேப்பரில் எழுதி எந்த பயனும் இல்லை. களத்தில் இறங்கி விதையை போட்டு தண்ணீர் ஊற்றி விளைய வைக்க வேண்டும்.
கடந்த சில காலமாக இந்த நோய் எல்லோருக்கும் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்? யாருக்கு என்ன பிரச்சனை என்று அவருக்கு தெரியுமா? பணக்கொழுப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால், இப்படிதான் என சீமான் தெரிவித்துள்ளார்.