காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்தித்தில் இயங்கி வரும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தில் CITU தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த CITU நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை அந்த இடத்துக்குச் செல்ல விடாமல் வழிமடக்கி காவல்துறை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பொடவூரில் திரண்ட தொழிலாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இவர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததை் தொடந்து போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த CITU மாநிலத் தலைவர் சௌந்திரராஜன், செயலர் முத்துக்குமார் மற்றும் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழியில் நிறுத்தி கைது செய்யப்பட்டனர். “சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வரும் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் அந்த இடத்துக்கு வராமல் திடீரென்று இடத்தை மாற்றி பொடவூர் பகுதியில் தொழிலாளர்கள் கூடினர். அவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.
அப்போது, “பன்னாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் தொழிற்சங்கம் அமைக்க உரிமை இல்லை என்று கூறுகின்றனர். இந்த மண்ணின் நிலங்களை பயன்படுத்திக் கொள்ளலாம், நீரை எவ்வளவு வேண்டமானாலும் உறிஞ்சிக் கொள்ளலாம், மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம், மின்வெட்டு ஏற்பட்டால் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய, மாநில அரசுகள் ஈடுகட்டும் என்றெல்லாம் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான ஒப்பந்தங்கள் போடப் படுகின்றன.
அந்த ஒப்பத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை சேர்த்தல் என்ன? அவர்கள் சங்கம் அமைப்பாளர்கள், அவர்களுடன் பேசித்தான் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்யாமல், தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படாமல் யாருக்காக இந்த ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. வழக்கமாக இதுபோல் நடைபெறும் போராட்டங்களை காலம் கடத்தி நீர்த்துபோகச் செய்யும் யுக்தியை அரசு கையாண்டு வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் இதைத்தான் செய்தார்கள்.
கடைசி வரை உறுதியாக நின்று தொழிலாளர்கள் போராட வேண்டும். உங்களின் வெற்றி அனைத்து தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும். வளர்ச்சி என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமை பலி கொடுக்க ஒரு போதும் அனுமதிக்க முடியாது. உங்கள் போராட்டத்துக்கு உறுதியாக நானும், நாம் தமிழர் கட்சியும் கடைசி வரை நிற்போம்” என சீமான் பேசினார்.