சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வரும் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 32 கிரவுண்டு நிலம் ஒப்படைப்பு

தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் அவற்றை உடனடியாக அந்தந்த கோவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உத்தரவின் பேரில், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரத்தை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்டு நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இவற்றில் கடந்த 2010-ம் ஆண்டு 12.5 கிரவுண்டு நிலம் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலம் 99 ஆண்டு குத்தகை காலம் முடிவுற்ற பின் கோவில் வசம் ஒப்படைக்க கோவில் செயல் அலுவலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் மூலம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கி்ல் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. அதனடிப்படையில் பள்ளிக்கூடத்தை தங்களால் தொடர்ந்து நடத்த இயலாது என கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவில் செயல் அலுவர் தியாகராஜனிடம், கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் பல கோடி மதிப்புள்ள 32 கிரவுண்டு இடம் மற்றும் பள்ளி கட்டிடங்களுக்கான ஆவணங்களை கோவில் வசம் ஒப்படைத்தார்.