மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கான போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயை பிரதமர் நரேந்திர மோடி தனியாகவும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. இதனால் ஆளும் கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 22-வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கட்சியின் நிறுவனர் சரத்பவார் இந்த அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற சந்தேகம் அடிக்கடி எழுப்பப்படுகிறது.
ஆனால் சிவசேனா நம்பக்கூடிய ஒரு கட்சி. இந்த அரசு அதன் முழு ஆட்சிகாலத்தையும் நிறைவு செய்யும். மேலும் அடுத்து மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் சிறப்பாக செயல்படும்.வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.