சில்லறை சண்டையில் பெண்ணிடம் சில்லறை தனமாக நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் கைது..!

சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமில்லை என்று வடமாநிலப் பெண் வீடியோ ஆதாரங்களுடன் முகநூலில் பதிவிட்டதையடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலப் பெண் ஒருவர் சென்னையில், கோட்டூர்புரத்தில் படிப்பதற்காக வந்துள்ளார். கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்குச் செல்வதற்காக ரேபிடோ ஆட்டோவை புக் செய்துள்ளார். 163 ரூபாய் ரேபிடோ கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், அப்பெண்ணிடமும், ஆட்டோ ஓட்டுநரிடமும் சில்லறை இல்லாமல் இருந்துள்ளது. அந்தப் பெண் 200 ரூபாய் கொடுத்து சில்லறை கேட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநருக்கும், வடமாநிலப் பெண்ணுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதில், அப்பெண்ணுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த வடமாநிலப் பெண் முகநூலில் பதிவேற்றம் செய்து, சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆட்டோ ஓட்டுநர் ஐ வாண்ட் மை மணி என்று கூறுகிறார். அதற்கு அந்தப் பெண் ஐ டோன்ட் ஹேவ் சேஞ்ச் என்று கூறி சில்லறை கேட்கிறார். சில்லறை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஸ்டுபிட், டோன்ட் ஷவுட் என்று கூறி அந்தப் பணத்தை அவர் மீது அப்பெண் தூக்கியெறிகிறார்.

இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் எச்சில் துப்பியும், ஆபாசமான வார்த்தைகளாலும் அப்பெண்ணை தாக்க முற்படுகிறார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் ஆண் நண்பர் இமெயில் மூலமாக அடையாறு சைபர் கிரைம் காவல்துறைக்கு வீடியோ ஆதாரத்தோடு புகார் அளித்துள்ளார். இதையடுத்து, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த ரேபிடோ ஆட்டோ ஓட்டுநரான பால்பாண்டியை காவல் துறையினர் கைது செய்தனர்.