சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.
கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 256 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,791ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது.
இதேபோன்று ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சீனாவின் வுகான் நகர குடியிருப்புவாசிகள், வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வைரஸ் தீவிரமுடன் பரவி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சீனாவிலுள்ள சுகாதார ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், வுஹான் பகுதியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம், டெல்லியில் இருந்து நேற்று சீனா புறப்பட்டது. மேலும் 2-வது விமானம் இன்று இந்தியாவில் இருந்து சீனா புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வுகானில் இருந்து 324 இந்தியர்களை ஏற்றி கொண்டு புறப்பட்ட சிறப்பு விமானம் இந்தியா வந்தடைந்தது. முதலில் அவர்களை டெல்லி விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை செய்கின்றனர். தேவைப்பட்டால் அவர்களை முகாமில் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.