சிம் கார்டு தவறாக பயன்படுத்தியதாக மிரட்டி ரூ.50 லட்சம் பறித்தது மட்டுமின்றி மீண்டும் பணம் கேட்டு தொடர் மிரட்டல் விடுததால் மன உளைச்சலுக்கு ஆளான வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சைபர் மோசடி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சைபர் மோசடிகளில் பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சைபர் மோசடிகளில் பாதிக்கப்படும் இவர்கள் சைபர் மோசடி கும்பலின் மிரட்டல் தாங்கமுடியாமல் இறுதியில் தற்கொலை ஒன்றே இதற்கு தீர்வு என்று விபரீத முடிவுகளை எடுத்து அவர்களின் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது. எனவே நீங்கள் கைது செய்யப்பட இருப்பதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம் என சைபர் கிரைம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை காவல்துறை கண்டுபிடித்தனர்.
அந்த கடிதத்தில், “இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள யாரும் தேவையில்லை. சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் நபர்கள் எங்களை தொடர்பு கொண்டு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி எங்களது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த விவகாரத்தில் இருந்து கைது செய்யாமலிருக்க அதிக பணம் செலவாகும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலுக்கு பயந்து டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை கொடுத்துள்ளார்.
சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் பணம் பெற்று கொண்டு கூடுதலாக பணம் கேட்டு டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஆகையால், யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை,
அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.