சிபிஐ என கூறி தமிழ்நாடு, கேரளாவில் பல கோடி மோசடி செய்த முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது..!

சிபிஐ என கூறி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மிரட்டி பல கோடி மோசடி செய்த சம்பவத்தில் முக்கிய நபரை எர்ணாகுளம் காவல்துறை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

சமீப காலமாக ஆன்லைன் மூலம் மோசடி நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாட்ஸ் அப் வீடியோ காலில் பலரை அழைத்து சிபிஐ அதிகாரி என்று கூறி மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். வீடியோ காலில் அழைத்து, அவர்களுக்கு வந்த ஒரு பார்சலில் போதைப் பொருள் இருப்பதாகவும், அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விர்ச்சுவல் கைது செய்துள்ளதாகவும் உடனடியாக தாங்கள் கூறும் பணத்தை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இவர்கள் மிரட்டி ஒவ்வொருவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்து வருகின்றனர்.

கேரளாவில் திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இதுபோல கடந்த 3 மாதங்களில் மட்டும் 30 கோடிக்கு மேல் இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. இந்நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர் இந்தக் கும்பலிடம் சமீபத்தில் 30 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து ஏமாந்தார். இது தொடர்பாக எர்ணாகுளம் மத்திய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஒரு முக்கிய நபர் டெல்லியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து எர்ணாகுளம் தனிப்படை காவல்துறை டெல்லி விரைந்து சென்று நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரின்ஸ் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்தான் முக்கிய நபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து மோசடிக் கும்பலுக்கு கொடுத்து வந்தார்.

வங்கிகளில் பெருமளவு பணம் வைத்திருக்கும் நபர்களின் கணக்கு விவரங்களை சேகரித்து அந்தக் கும்பலுக்கு இவர் அனுப்பி வைப்பார். பெரும்பாலும் வயதானவர்களைத் தான் இந்தக் கும்பல் குறிவைக்கும். மோசடிக் கும்பலின் வங்கிக் கணக்குக்கு வரும் பணத்தை இவர் கிரிப்டோ கரன்சியாக மாற்றி அந்தக் கும்பலுக்கு கொடுப்பார்.

இதன் மூலம் பிரின்ஸ் பிரகாஷுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்து வந்துள்ளது. இதுவரை இவருக்கு இந்த மோசடி மூலம் பல கோடி பணம் கிடைத்துள்ளது. இவர் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இதுபோல மோசடி நடத்தியுள்ளார் என காவல்துறை தெரிவிக்கின்றனர்.