தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் முன்பு அறிவித்த நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையின் செயல், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி முறிவு குறித்த அறிவிப்புடன்’நன்றி மீண்டும் வராதீர்கள்’ என்ற ஹேஷ்டேக்கையும் சமூக வலைதளங்களில் அதிமுக பதிவிட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. அதிமுகவிற்குத்தான் நஷ்டம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி பிரிந்து இருந்தது.
சிதறிக் கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக தான். பிரிந்து இருந்த அதிமுக தலைவர்களை ஒன்று சேர்த்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் பாஜக அமர்த்தியது. எடப்பாடி இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறார். அதிமுகவை நாங்கள் ஒட்டி வைக்கவில்லை என்றால் சிதறி இருக்கும். ஓபிஎஸ் ஒன்று சொல்ல இவர்களும் ஒன்று சொல்ல மாறி மாறி பிரச்சனை உருவானது. அப்போது ஓபிஎஸ்ஸை இபிஎஸ் முன்பாக உட்கார வைத்து பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தப்பட்டது.
இதற்கெல்லாம் சாட்சியாக கூடவே நான் இருந்தேன். அவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ரொம்ப சாதனை செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கூட்டணி முடிந்தது என்றால் அதிமுகவும் இன்றுடன் முடிந்தது. வருகிற 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.