சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கோரிக்கை ஏற்பு

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பேரூராட்சி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த சுபலா கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் அவருக்கும், அவர் குடியிருந்து வரும் பகுதியிலும் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், உதவி கேட்டும் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் வீடியோ வெளியிட்டதால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதனால் தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கதறி அழுதபடி மற்றொரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி யது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் நேற்று சுபலா வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.


அத்துடன் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பொதுமக்களின் கோரிக்கை படி அந்தபகுதியில் தெருவிளக்கு அமைக்கப்பட்டு அங்குள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதிக்கு பால், காய்கறி மற்றும் பழங்கள் வாகனங்களில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சுபலாவுக்கு விரைவில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். பகுதியில் உள்ள குடும்பங்களில் ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு மகளிர் திட்ட அதிகாரி மூலம் அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. வருவாய் துறை சார்பில் அனைத்து நலத்திட்டங்களையும் விரைந்து செய்து கொடுப்பதாக தோவாளை தாசில்தார் உறுதியளித்துள்ளார்.