பஞ்சாப் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவியர் விடுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த துணை வேந்தர் பதவி விலக கோரி, மாணவிகள் திடீர் போராட்டம்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ராஜீவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு மாணவியர் விடுதியும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. மாணவிகள் விடுதி விதிமுறைகளின்படி, அந்த விடுதி வளாகத்திற்குள் பெற்றோர்கள் கூட உள்ளே செல்ல அனுமதி இல்லை.
விடுதி தொடர்புடைய மாணவிகள் மட்டுமே மாணவிகள் விடுதி வளாகத்திற்குள் நுழைய முடியும். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் அல்லது அனுமதியும் இன்றி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெய் சங்கர் சிங் விடுதி வளாகத்திற்கு சென்றார்.
அனுமதியின்றி விடுதிக்குள் நுழைந்து துணை வேந்தருக்கு எதிராக மாணவிகள் திடீர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் கூறுகையில், ‘முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு போதிய வசதிகள் இல்லாதது தொடர்பாக புகார் வந்ததால், துணைவேந்தர் விடுதிக்குள் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் விடுதிக்குள் ஆய்வு நடத்துவதாக இருந்தால், மாணவிகளுக்கோ அல்லது விடுதி காப்பாளருக்கோ முன்னறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
மேலும், ஆய்வுக்கு வந்த அவருடன் பெண் ஆசிரியர்களோ, காவலர்களோ இல்லை. ஆய்வுக்கு வந்த துணை வேந்தர், விடுதிக்குள் மாணவிகளின் அறைக்கு சென்றதால், அங்கிருந்த மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். குளித்துவிட்டு அறைக்குள் திரும்பிய மாணவியிடம் துணை வேந்தர் விசாரணை நடத்தினார்.
அந்த மாணவி தனது உடையை சரியாக அணிவதற்குக் கூட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை. இவ்விசயத்தில் துணைவேந்தர் பதவி விலக வேண்டும். அவர் மாணவிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என தெரிவித்தனர்.