கோவை சத்யன்: சீமான் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து மேடைக்கு மேடை உளறுகிறார்..!

நாம் தமிழரின் வாக்கு வங்கியில் பெரும்பான்மையான வாக்குகள் நடிகர் விஜய்க்குப் போகும். இதனால் பயந்து நடுங்கி தன்னை காப்பாற்ற வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து கொண்டு மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு கோவை சத்யன் அளித்த பேட்டியில், எதை எடுத்தாலும் இதை நான் சொன்னேன்.. நான் சொன்னேன் என்கிறவர் சீமான். தமிழக அரசியல் களத்தில் எந்த சாதனையும் செய்யாமல், மக்கள் நலத் திட்டங்களையும் செய்யாமல் மற்ற கட்சியினர் செய்த அனைத்து சாதனைகளையும் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி சுற்றக் கூடிய, வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கக் கூடிய யார் எனக் கேட்டீர்கள் எனில் சீமான் என சுற்றுகிறவர்தான். இன்னும் சொல்லப் போனால் சீமானின் தாத்தாதான், லார்டு மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கே அறிவுரை சொல்லி இந்தியாவுக்கே சுதந்திரம் கொடுத்ததாகவும் அடுத்ததாக சொல்வார்.

7 தலைமுறைகளுக்கு முன்னர் இருந்த சீமானின் எள்ளு தாத்தாதான் வேலுநாச்சியாரின் அப்பாவுக்கு பெண் குழந்தை பிறந்த போது, வேலுநாச்சியார் என பெயர் வைத்தது என்று கூட சொல்வார். இந்த அளவுக்குக் கட்டுக் கதைகளும் போலி கற்பனைகளையும் வெட்கமே இல்லாமல் இந்த அளவுக்கு அடுத்தவர் சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் அவரது அரசியல் கட்டமைப்பு. இதுவரைக்கும் மக்கள் நலனுக்காக பேச்சாகவோ செயலாகவோ போராட்டமாகவோ அவர் அறிவித்த வரலாறு எதுவுமே இல்லை. ஊடகங்களில் அடுத்தவரை கேலி பேசுவதும் தரக்குறைவாக பேசுவதும் ஒரு பெரிய வீரர் போல மேடை நாடகத்தில் நடிப்பது போலவும் செய்வதை மட்டுமே கொள்கையாக வைத்திருப்பவர் சீமான்.

குறிப்பாக இளைஞர்களை தூண்டிவிடக் கூடியவர் சீமான். வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்பது உரிய குழுக்கள் அமைத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்த முன்னெடுப்பு. என்னென்ன தொழில்கள் இந்த பகுதியில் தொடங்க கூடாது என்பது வரை வரையறை செய்து, அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேளாண் பாதுகாப்பு மண்டலம் கிடையாது. இது எடப்பாடி பழனிசாமியின் சிந்தனையில் உதித்த ஒன்று. இதற்கு கூட சீமான் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டுகிறார். ஆமைக்கறி போன்ற கட்டுக்கதைகளின் தொடர்ச்சிதான் இது. நடிகர் விஜய் கட்சியை தொடங்கி இருப்பதற்கு யார் பயப்படுகிறார்களோ இல்லையோ சீமான் அரண்டு நடுங்கி பயந்து போய் இருக்கிறார். ஏனெனில் அவரிடம் கட்டமைப்பே இல்லை. அவரிடம் இருப்பது எல்லாம் மாவட்ட செயலாளர்கள் என்பவர்கள்தான். 13 ஆண்டுகளாக சீமானை நம்பி வீணாகப் போய்விட்டோம் என்று சொல்லி வெளியே வருகிறவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

விஜய் மேடையிலேயே யார் வந்தாலும் அரவணைப்போம் எனவும் அறிவித்துவிட்டார். ஆகையால் முதலில் காலியாகப் போவது நாம் தமிழர் என்கிற கூடாரம்தான். நாம் தமிழரின் வாக்கு வங்கியில் பெரும்பான்மையான வாக்குகள் நடிகர் விஜய்க்குப் போகும். இதனால் பயந்து நடுங்கி தன்னை காப்பாற்ற வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க பயந்து கொண்டு மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் சீமான் என கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.