தமிழகம் முழுவதும் கோவிட் -19 குறைந்து வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு இன்னும் குறையவில்லை. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கோவிட் -19 பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால், பிற உடல்நலபொதுப் பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த குறைபாட்டை தவிர்க்க, கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, டெலி மெடிசன் மூலம் சிகிச்சை பெற புதிய சிறப்பு செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியின் பயன்பாட்டை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது நகர்நல அதிகாரி ராஜா உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மாநகராட்சி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட செல்போன் செயலியை செல்போனில் பிளே ஸ்டோரில் சென்று சிபிஇசிஒஆர்பி விஎம்இடி (CBECORP Vmed) என்ற டைப் செய்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் http://qrgo.page.link/sby6R என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை பயன் படுத்தி 24 மணி நேரமும் வீடியோ கால் மூலம் மருத்துவர்களிடம் இலவசமாக ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம் என தெரிவித்தார்.