கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் வேகமாக குணமடைந்து வருகின்றனர்

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீனாவிலிருந்து கடந்த 23-ந் தேதி இந்தியா திரும்பிய கேரள மாணவி ஒருவர் கொரோனா அறிகுறி இருப்பதாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதனை புனே ஆய்வு மையம் உறுதி செய்தது. பின்னர் அந்த மாணவிக்கு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே சீனாவில் இருந்து திரும்பிய ஆலப்புழா மற்றும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 2 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களுக்கும் ஆலப்புழா மற்றும் காசர்கோடு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திருச்சூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவியும், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்ற மாணவரும் வேகமாக குணமடைந்து வந்தனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது தற்போது வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 2 பேரின் ரத்த மாதிரிகளும் மீண்டும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.