கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை, கிண்டி, கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள அரசு கொரோனா மருத்துவமனையில், சட்டமன்றப்பேரவையில் கவர்னர் உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தவாறு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்கள்.

இம்மையத்தில் ககொரோனா தொற்றுலிருந்து மீண்டவர்களுக்கு இருதயம், நரம்பியல், சிறுநீரகம், வயிறு மற்றும் குடல், கண், நீரழிவு, உளவியல் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளும் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார். இம்மையம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இம்மையத்தில், சர்வதேச பயணிகளுக்கு பன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு 1948-ல் இருந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு, உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தென் இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரே தடுப்பூசி மையமாக இந்நிலையம் விளங்குகிறது. மேலும், ஹஜ் பயணம் மேற்கொள்வோர்க்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது எண்பது குறிப்பிடத்தக்கது.