கூரியர் நிறுவனம் என பேசி…! ஸ்கைப் லிங் அனுப்பி…! மொத்தமா ரூ. 27 லட்சத்து 46 ஆயிரத்து 101 ஆட்டைய போடா ஆசாமி…!

நவீன தொழில் நுட்பம் வளர வளர மோசடிகளும் புதுப்புது வழிகளில் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. மேலும் இணைய வழி பரிவர்த்தனை மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டதால் சைபர் கொஞ்சம் அசந்தாலும் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அபேஸ் செய்து விடுவது குறித்த செய்திகளையும் பார்க்கிறோம். அதன் வரிசையில், சென்னை மதுர வாயலை சேர்ந்த ராஜசேகரன் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 13 -ம் தேதி வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு ராஜசேகரன் சென்று இருந்தார்.

அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பிரபல தனியார் கூரியர் நிறுவனத்தின் மேலாளர் என்றும் உங்கள் பெயரில் ஒரு வங்கியில் இருந்து ஏடிஎம் கார்டு ஒன்றும் அதனுடன் பார்சலும் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் உள்ளது. எனவே, நாங்கள் காவல்துறையில் புகாரளித்து இருக்கிறோம். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் சைபர் கிரைம் காவல்துறையும் விசாரணை மெற்கொண்டு வருகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

விசாரிக்க தங்களுடன் காவல்துறை வருவார்கள் என்று மிரட்டியுள்ளார். காவல்துறையில் சிக்காமல் இருக்க நான் ஒரு ஐடியா தருகிறேன் என்று அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த ராஜசேகரனிடம் ஸ்கைப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறி ஸ்கைப் லிங்கை ராஜசேகரன் மொபைல் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.கொஞ்சமும் யோசிக்காமல் ராஜசேகரன் உடனே லிங்கை கிளிக் செய்து தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது திடீரென தனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில், தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்ததாகவும் அதன் படி ரூ.19 லட்சம் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

பின்னர் ஒரு சில நொடிகளில் அந்த பணம் வங்கிக் கணக்கில் இருந்து மாயமானது. மேலும் ராஜசேகரன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.7 லட்சமும் மாயமானது. வங்கிக் கடன் பெற்றது மற்றும் ஏற்கனவே இருப்பில் இருந்த பணமும் சேர்த்து என மொத்தமாக ரூ. 27 லட்சத்து 46 ஆயிரத்து 101 ரூபாய் மாயமானது. அப்போது தான் தனக்கு போன் செய்தது மோசடி நபர் என்றும் அனுப்பப்பட்டது ஸ்கைப் லிங்க் இல்லை என்றும் தனது போனை கட்டுப்பாட்டில் எடுக்கும் லிங்க் என்பதையும் கண்டறிந்துள்ளார். இதையடுத்து கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது உங்களுக்கு ஒரு பார்சலும் வரவே இல்லை என்றும் கைவிரித்தார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ராஜசேகரன் உடனடியாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறைக்கு புகாரளித்துள்ளார்.