நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா நெல்லியாளம் அருகே வாழவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை ஒட்டி பொன்னானி ஆறு ஓடுகிறது. ஆனால் ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் இல்லை.இதனால் மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்து வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைகின்றன.
இதன்காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஆறு அகலப்படுத்தப்பட்டது. ஆனால் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள் மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தவிர்க்க தடுப்புச்சுவர் கட்டுவது உள்ளிட்ட முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இதனால் மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வாழவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஓடும் பொன்னானி ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் கட்டி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.