குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா..!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் நேரு நகரில் கடந்த 2 வருடங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். இதனால் தண்ணீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது.

மேலும் குடிநீர் வண்டி ரூ.500 வரை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே கூலி வேலைக்கு செல்வதால் குடிநீரை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.