ஓட்டுனராக சத்தியமூர்த்தி என்பவரும் நடத்துனராக நேரு என்பவரும் இருந்த அரசு குளிர்சாதன பேருந்து சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். னர். இந்த பேருந்து வடலூரில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நேற்று முன்தினம் நின்றது. அப்போது அங்கு வந்த சிதம்பரம் பணிமனையை சேர்ந்த பயணசீட்டு பரிசோதகர்கள், பேருந்தில் ஏறி பயணிகளிடம் பயணசிட்டை வாங்கி பரிசோதனை செய்தனர்.
அப்போது அந்த பயணசீட்டுகள் அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பயணசீட்டுகள் என்பதும், இதில் ஏதோ குளறுபடி நடந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பயணசீட்டு பரிசோதகர், பேருந்து நடத்துனர் நேருவிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதால் பேருந்தை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பணிமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் சேலம் பணிமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு அதிகாரிகள், நடத்துனர் நேருவிடம் விசாரணை நடத்திய போது, அவர் சேலத்தில் இருந்து ஏறிய பயணிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பயணசீட்டு கொடுத்துள்ளார். பின்னர் பயணிகள் அவர்களின் ஊர்களில் இறங்கும் போது, அந்த பயணசீட்டை வாங்கி வைத்துக்கொண்டு அதே பயணசீட்டை மற்ற பயணிகளுக்கு கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. பயணிகள் செலுத்திய பயணசீட்டு தொகைக்கும், நடத்துனர் வைத்திருந்த தொகைக்கும் வித்தியாசம் வந்துள்ளது. இதையடுத்து நடத்துனர் நேருவை அதிகாரிகள் நேற்று பணியிடை நீக்கம் செய்தனர்.