வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் வட சென்னையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பதுக்குபவர்கள், விற்பனை செய்பவர்கள், விநியோகம் செய்பவர்கள் மீதான நடவடிக்கையை காவல்துறை நடவடிக்கைகளில் அதிதீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக உளவுத்துறை காவலரே திருடி வெளியே விற்று வந்துள்ளார். உளவுத்துறை காவலரே இதுபோன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் செயலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த சிசிடிவியில், உளவுத்துறை தலைமைக் காவலர் வெங்கடேசன், மூட்டையில் இருந்து குட்காவை எடுத்து செல்வதும், ஓட்டேரி காவல் நிலைய வாசலில் சிலரிடம் பேசுவதும் பைக்கில் வைப்பது போலவும் பதிவாகி உள்ளது. மேலும் அவர் குட்கா பாக்கெட் எடுத்து செல்லும் போது காவலர் இருக்கிறார். அவர் முன்னிலையிலேயே இது நடப்பது அதிர்ச்சியிலும், அதிர்ச்சி.
இது தொடர்பாக தகவலறிந்த சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், கடந்த நவம்பர் 25-ம் தேதி குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 770 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டேரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து தான் வெங்கடேசன் குட்கா பாக்கெட்டை எடுத்து சென்றது தெரிந்தது. குற்றச்சாட்டுக்குள்ளான தலைமைக் காவலர் உளவுத்துறை பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அதன் துணை ஆணையர் துறைரீதியிலான விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
முதற்கட்ட விசாரணையில் தலைமைக் காவலர் குட்காவை விற்பனை செய்யவில்லை எனவும், வெள்ள நிவாரண பணியின் போது பணியாற்றியவர்களுக்கு குட்கா பொருட்களை எடுத்து கொடுத்ததாகவும் காவலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட உளவுத்துறை தலைமை காவலர் வெங்கடேசன் சென்னை மேற்கு மண்டலத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.