மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம், தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் அதாவது ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தாங்களாக முன்வந்து கொடிக் கம்பங்களை அகற்றி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அகற்றப்படாமல் இருக்கும் கொடிக் கம்பங்களை அதிகாரிகள் தீவிரமாக அகற்றி வருகின்றனர். இந்நிலையில், திருவேற்காடு நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி ஆலோசனையின் படி, நகரமைப்பு அலுவலர் சாந்தி, நகரமைப்பு ஆய்வாளர் சங்கர் மற்றும் வருவாய் துறையினர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த திருவேற்காடு பேருந்து நிலையம், நூம்பல் சாலை, வேலப்பன்சாவடி, அயனம்பாக்கம், கோலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கட்சி கொடி கம்பங்கள், போர்டுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றை அகற்றினர். மேலும் கொடி கம்பங்களை அகற்றும்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க பலத்த காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், மிக உயரமான கொடிக் கம்பங்களை கிரேன் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.