போதைப் பொருள் விவகாரம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் திமுக நிர்வாகிகள் பலர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளனர், அதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே இப்போது நயன்தாரா- தனுஷ் பிரச்சனையைத் திட்டமிட்டு பெரிதாக்குகின்றனர் என மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய காயத்திரி ரகுராம், “போதைப் பொருள் விவகாரம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
ஏற்கனவே திமுக நிர்வாகிகள் பலர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளனர். அதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே இப்போது நயன்தாரா- தனுஷ் பிரச்சனையைத் திட்டமிட்டு பெரிதாக்குகின்றனர். தன்னை தானே சமூக நீதி காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திமுக, இதுவரை சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார்கள்? தேர்தலுக்கு முன்பு வரை எல்லா பெண்களுக்கும் மாதாமாதம் 1000 ரூபாய் தருவோம் என்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் கட்சி நிர்வாகிகள், வேண்டியவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் தரும் வகையில் திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 18000 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆகையால், இங்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை.. சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது.. உதயநிதி ஒரு செங்கல்லை வைத்து நம்மை ஏமாற்றினார்.. அடுத்த முறை செங்கல்லுடன் தொகுதிக்கு வந்தால் நீங்களே தக்க பதிலைக் கொடுங்கள்” என காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.