காதலி கொலை.. மறுநாள் அதே இடத்தில் வேறு பெண்ணுடன் உல்லாசம்.. காட்டி கொடுத்த ஆறாவது விரல்..!

பெற்றோர் இல்லாத பெண்ணை காதலித்து, திருமணத்திற்கு நெருக்கடி கொடுத்த காரணத்தால் கொலை செய்து அதே இடத்தில் மறுநாள் வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே அமைதிசோலை பகுதியில் கடந்த 13-ஆம் தேதி, எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக கன்னிவாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறை உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், உடலின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்த நிலையில் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இடது கை மட்டும் எரியாமல் இருந்தது. அந்தப் பெண்ணுக்கு இடது கையில் 6 விரல்கள் இருந்ததை கண்டறிந்த காவல்துறையினர், சமூக வலைதளங்களில் அதுகுறித்து தகவல் பரப்பினர்.

அதை பார்த்த திண்டுக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது தோழி மாரியம்மாளுக்கு 6 விரல்கள் இருப்பதும், அவர் காணாமல் போனது தொடர்பாக அந்த பெண்ணின் காதலன் பிரவீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்து அன்று உன்னுடன் தானே மாரியம்மாள் வந்தாள் எனவும் கேள்வி கேட்டுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட பிரவீன், கன்னிவாடி காவல் நிலையம் சென்று தனது காதலியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரை வாங்கிக்கொண்ட காவல்துறையினர், பிரவீனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரவீனிடம் விசாரணையை மேற்கொண்டனர். பிரவீனிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மாரியம்மாள் பெற்றோர் இல்லாத நிலையில் மதுரையில் ஆசிரமத்தில் வளர்ந்து வந்துள்ளார். அங்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் அறிமுகமான பிரவீனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாக ஜோடியாக உலாவி வந்ததால், தன்னை திருமணம் செய்யும் படி மாரியம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு பிரவீன் மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்து அன்று மாரியம்மாளிடம் நைசாக பேசி, அமைதிசோலை பகுதிக்கு பிரவீன் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து அப்பாவி பெண்ணை கொலை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். காதலியை கொலை செய்த குற்ற உணர்ச்சி துளியும் இல்லாமல் மறுநாளே மற்றொரு பெண்ணை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பிரவீன் உல்லாசமாக இருந்துள்ளார்.

தொடர்ந்து அமைதிசோலைக்கு தனியாக சென்ற பிரவீன், அங்கு சடலமாக கிடந்த மாரியம்மாள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, பிரவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.