கடந்த மாதம் 7-ம் தேதி காலை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து சென்றது. நடத்துனர் இல்லாத இந்த பேருந்தில், கண்டாச்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தமிழரசு என்ற நடத்துனர், பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துவிட்டு இறங்கிவிட்டார். காலை 6.45 மணியளவில் விழுப்புரம் பேருந்து நிலையம் வந்த பேருந்தை வேலூர் மண்டல பயணச்சீட்டு பரிசோதகர் ஜெயவேல் தலைமையிலான குழுவினர் நிறுத்தி பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பயணச்சீட்டுகள் 2021-2022-ல் கொரோனா காலத்தில் காணாமல் போன டிக்கெட்கள் என தெரியவந்தது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் முருகன், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் காணாமல் போன, ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 520 மதிப்பிலான பயணச்சீட்டுகளை பயணிகளிடம் தமிழரசு வழங்கியதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.இந்நிலையில், நடத்துனர் தமிழரசு, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ஏற்கனவே காணாமல் போன பயணச்சீட்டுடை கிளை மேலாளர் முருகன், அலுவலக பணியாளர்கள் 4 பேர் மூலமாக நடத்துனர்களுக்கு தெரியாமல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி தவறான முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளார், என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்கியதாக நடத்துனர் தமிழரசுவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கிளை மேலாளர் உள்பட 14 பேரிடம் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.