1968- ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வரும் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் எவ்வித அனுமதியும் பெறாமல் கல்லூரிக்குள் திடீரென நுழைந்து அங்கு பயன்படுத்தப்படாமல் இருந்த கழிப்பறையை சுத்தம் செய்வதுபோல வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அந்த சமூக வலைத்தளப் பதிவில், கழிப்பறை சுத்தமாக இல்லை என்று அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பெயரில் அதிமுகவினரே புகார் கூறி பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இதுகுறித்து கல்லூரி முதல்வர் சீனிவாசன் வாலாஜா காவல் நிலையத்தில் கடந்த 10-ம் தேதி புகார் செய்தார். அதில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தூண்டுதலின் பேரில், அதிமுக நிர்வாகிகள் வீடியோ எடுத்ததாக கூறி உள்ளார். அதன்பேரில், அதிமுக மகளிர் அணி செயலாளர் ராதிகா உட்பட 22 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.