இந்தி படித்தால் பெரியாளாகி விடலாம் என்றால், வடமாநில இளைஞர்கள் வேலை தேடி ஏன் தமிழ்நாடு வருகிறார்கள்? வட இந்தியாவில் இருப்பவர்களை மொத்தமாக அழைத்து வந்து இங்கு ஹேராம்னு பாட்டு பாடலாம் என்று நினைக்கிறீர்களா? அது சரியல்ல என முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்தார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையிலான வார்த்தை மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சோசியல் மீடியாவில் திமுகவினர் கெட் அவுட் மோடி என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பாஜக தரப்பில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்தி திணிப்பு மற்றும் கல்வி நிதி விவகாரம் தொடர்பாக இரு கட்சியினர் மத்தியில் மோதல் போக்கு உருவாகி இருக்கிறது.
இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் அண்ணாமலை குறித்து கருணாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக் கொள்கைதான். ஏற்கனவே தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது, தாய்மொழியான தமிழை விழுங்க வேண்டும் என்று இந்தி திணிப்பதற்கான முயற்சியை எடுக்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழக தலைவர்களே வரவேற்பது வேதனையாக உள்ளது.
இது எவ்வளவு பெரிய துரோகம். பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தமிழ் மொழியை அழிக்கக் கூடிய திட்டம் என்று தெரிந்தும் ஆதரிக்கிறாரே.. கட்சியில் பொறுப்பில் இருக்கிறோம் என்று பேசுகிறார் என்றால்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதே தமிழ் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் 3-வது மொழியை கற்றுக் கொள்ள வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. 3 என்ன.. 300 மொழிகளை கூட கற்றுக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது.
அதற்காக பல மொழி பேசும் தேசத்தில் ஒரே மொழியை கற்பிக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை மாற்றுங்கள். தமிழ் மொழி தானே இந்தியாவின் மூத்த மொழி. 3 மாதத்தில் இந்தியை கற்றுக் கொள்ளலாம் என்று அண்ணா கூறினார். 3 மாதத்தில் கற்றுக் கொள்வது கடந்து அந்த மொழியில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான். மும்மொழிக் கொள்கை தேவையில்லை என்பதே கருத்து. அதேபோல் முன்பாக கோபேக் மோடி என்று கூறினோம். இப்போது கெட் அவுட் மோடி என்று கூறுகிறோம். படித்து அதிகாரியாக இருந்த அரசியல்வாதி ஒருமையில் பேசலாமா? அரசியல்வாதியாக இருந்திருந்தால் அண்ணாமலைக்கு பண்பு இருந்திருக்கும். அவர் திடீரென வந்தவர் என்பதால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார்கள்.
இந்த மண், மொழி, மக்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். கும்மிடிபுடி தாண்டினால் யாரையும் தெரியாதா? எங்களுக்கு ஆங்கிலம் இருக்கிறது. ஆங்கிலம் தெரியாது என்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை. வடமாநிலத்தில் இருப்பவர்களை ஆங்கிலம் படிக்க சொல்லுங்கள். இந்தி படித்தால் பெரியாளாகி விடலாம் என்றால், வடமாநில இளைஞர்கள் வேலை தேடி ஏன் தமிழ்நாடு வருகிறார்கள்? வட இந்தியாவில் இருப்பவர்களை மொத்தமாக அழைத்து வந்து இங்கு ஹேராம்னு பாட்டு பாடலாம் என்று நினைக்கிறீர்களா? அது சரியல்ல என கருணாஸ் தெரிவித்துள்ளார்.