கடலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கூட்டணி கட்சியினர் தனித்தனியாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் 28-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். பாஜக சார்பில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் தனியாக அலுவலகம் அமைத்து தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்தல் அலுவலகத்துக்கு வந்த கவுன்சிலர் சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பாஜக மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பாஜக மாவட்ட, மாநில நிர்வாகிகளை தகாத வார்த்தையால் கூறி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த வீடியோவில், ‘மேடை போட்டால் நீங்கள் எல்லாம் தலைவராகி விடுவீர்களா?. கட்சியில் நிர்வாகிகளை சேர்க்க நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டோம். அண்ணாமலை ராணுவ வீரர் பற்றி பேசுகிறார். நான் ஒரு கவுன்சிலர். என் மீது திருட்டு வழக்கு போடப்பட்டுள்ளது, சஸ்பெண்ட் செய்துள்ளனர். அதுபற்றி அண்ணாமலை ஏன் பேசல?. இந்த கட்சிக்காக என் வாழ்க்கையே இழந்து விட்டேன்.
என்ன மீறி நீங்க எப்படி கட்சிய வளர்க்கீங்கக்கனு பாக்கேன்,’ என கூறிய சக்திவேல், அங்கிருந்த மாவட்டத் தலைவர் மற்றும் பாஜக நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசி ஒவ்வொருத்தனையும் கொல்லாம விடமாட்டேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பாஜவினர் மட்டுமல்ல கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.