கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள்..! சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

திருப்பதி ஏழுமலையான் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. லட்டில் விலங்கு கொழுப்பு கலந்ததாக தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டியது ஏன்? கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் என்று நீதிபதிகள் கூறினர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியான நிலையில் விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறியக் கோரியும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிடக்கோரி இதுவரை ஐந்து பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணிய சாமி உட்பட மனுதாரர்கள் தரப்பு வாதத்தில்,” திருப்பதி லட்டு விவகாரம் என்பது பலகோடி பக்தர்களின் நம்பிக்கை சார்ந்தது ஆகும். அதில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று பொதுவெளியில் கூறுவது என்பது மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலானது.

உணர்வுபூர்வமான விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் இவ்வாறான பொறுப்பற்ற கருத்தை ஏன் கூற வேண்டும்?. பிரசாதம் தொடர்பாக சந்தேகம் இருந்தால் அது ஆய்வுக்கு உடபடுத்தப்பட வேண்டுமே தவிர, ஒரு உயர்ந்த பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற ஒரு கருத்தை கூறுவது ஏற்புடையது கிடையாது.

நிராகரிக்கப்பட்ட பிரசாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா?. இந்த விவகாரத்தில் அரசின் தலையீட்டை அனுமதிக்கலாமா? குறிப்பாக இந்த பிரசாதம் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கபட்டுள்ள போது ஏன் பொது வெளியில் சென்று பத்திரிகைகளிடம் கருத்தை தெரிவிக்க வேண்டும். என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ இந்த விவகாரம் என்பது நம்பிக்கை, உணர்வு சார்ந்த விவகாரம், எனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பேசினார்.

ஆந்திர மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘திருப்பதி ஏழுமலையான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யினை வாங்குவதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து லட்டின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது. குறிப்பாக இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எந்த மனுக்களும் அனுமதிக்கபட்டவை கிடையாது. சுப்பிரமணிய சாமி எப்படி திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்பாக மனு தாக்கல் செய்ய முடியும்.

இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை என பேசினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘கலப்பட நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதி செய்து விட்டீர்களா என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று ஆந்திரா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அப்படி என்றால் அதற்குள் ஊடகங்கள் இடம் செல்ல வேண்டிய அவசியம் என்ன நீங்கள் மத நம்பிக்கைகளை உதாசீதன செய்துள்ளீர்கள் காட்டமாக கூறினார்கள்.

நீதிபதிகள் தொடர்ந்து பேசுகையில், இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு முடிவு வெளிவரும் வரை பொறுமை காக்காமல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தது தவறானதாகும். இந்த விவகாரம் எனபது ஒரு லட்சம், இரண்டு லட்சம் பக்தர்களை சார்ந்த்து கிடையாது. கோடான கோடி பக்தர்களின் உணர்வுகளை சார்ந்ததாகும். எனவே இதில் அரசியல் செய்திருக்க கூடாது. நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களில் ஆய்வறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது.

அப்படி இருக்கும் போது, இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை ஊடகங்களுக்குச் சென்று இந்த சொல்ல வேண்டிய அவசியம் என்ன? மேலும் அந்த நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா என்பதற்கு தற்போது வரையில் தெளிவு இல்லை. இது சம்பந்தமான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வந்த ஆய்வறிக்கையை, செப்டம்பர் மாதத்தில் ஊடகங்களில் முன்பு தெரிவித்தது ஏன்? இதற்கான உள்நோக்கம் என்ன?

அதுகுறித்த எதற்கும் தெளிவான பதில் இல்லையே. அப்படி இருக்கையில் ஆந்திர முதலமைச்சர் ஏன் இந்த தகவலை தெரிவிக்க வேண்டும் என்பது தான் எங்களது முக்கிய கேள்வியாக இருக்கிறது. இதுகுறித்த விளக்கம் எங்களுக்கு கட்டாயம் வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் வைத்த குற்றச்சாட்டு தற்போது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. . மேலும் இந்த விவகாரத்தில் பொதுவெளியில் கருத்து தெரிவித்தால் பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கும் என்பதை ஏன் ஆந்திர முதலமைச்சர் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் சிறப்பு விசாரணை குழுவின் புலன்விசாரணையை பாதிக்கும் என்பதை கூடவா அவர் தெரிந்திருக்கவில்லை. இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இருப்பினும் இந்த வழக்கை நாங்கள் வரும் 3-ஆம் தேதி அதாவது வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் இந்த விவகாரத்தில் அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டுமா அல்லது வேறு குழு அமைக்க வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்து தெரிவிக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து வழக்கு குறித்து முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.