கோயம்புத்தூர் மாநகராட்சியில் இதுவரை செய்து முடிக்கப்பட்ட திட்டப்பணிகளுக்காக ரூ.80 கோடி நிலுவைத் தொகை பாக்கியுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் ரோடு போடுதல், பேட்ச் ஒர்க் மேற்கொள்ளுதல், மழை நீர் வடிகால் கட்டுதல், குப்பை அள்ளுதல், சிறு பாலம் கட்டுதல், பூங்கா உருவாக்குதல், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை தவிர, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளும் செய்யப்படுகின்றன. குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், கோயமுத்துார் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில், கோயமுத்துார் மாநகராட்சி பகுதிகளில் கடந்த நான்கு மாதமாக முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கான பில்கள், ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் உள்ளன. ரூ.80 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்ட பில்களுக்கு தொகை வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்., முதல் பில் தொகை கோப்புகளில் ஆணையர் கையெழுத்திடாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா பரவல் காலம் என்பதால் பணிகளை ஒப்பந்ததாரர்கள் தொய்வின்றி செய்து வருகின்றனர். ஆணையர் குமாரவேல் பாண்டியனை இட மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது காலத்தில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் பணியிட மாறுதல் பெற்றுச் சென்றால் ஒப்பந்த நிறுவனத்தினர் நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என தெரிவித்தனர்.