“ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற கானா பாடலை பாடிய இசைவாணிக்கு பல்வேறு எண்களில் இருந்து கொலை மிரட்டல் வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு “ஐ ஆம் சாரி ஐயப்பா”என்ற பாடலை பாடி இருந்தார். மேலும் “ஐ ஆம் சாரி ஐயப்பா”என்ற பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்துள்ளார். இந்த பாடல் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து சர்ச்சையுமாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், கானா பாடல்களும், சமூக விழிப்புணர்வு பாடல்களும் தான் பாடிவருவதாகவும், இதைப்போன்று கடந்த 2019-ஆம் ஆண்டு “ஐ ஆம் சாரி ஐயப்பா” பாடல்களை பாடியதாகவும், அந்த பாடல் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. மேலும் தன்னை அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகின்றனர்.
அத்துடன், பாடல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பாடப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வேண்டுமென்றே சமூகத்தில் பதட்டம் ஏற்படுத்தவும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தவும் திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருவதாக புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதனால், தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானது மட்டுமல்லாமல், சமூக விரோதிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளேன். எனவே, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டு, மிரட்டல் வந்த எண்களையும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.