எ.வ.வேலு: 7 ஏக்கரில் புதிய கன்வென்ஷன் சென்டர் அமைக்க ஆய்வு..!

சைதாப்பேட்டையில் திருமண உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் 7 ஏக்கரில் பல்நோக்கு மையம் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிண்டி அருளாயி அம்மா பேட்டையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திருமண உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் புதிய பல்நோக்கு மையம் அமைப்பதற்கான இடத்தினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு மற்றும் சேகர்பாபு ஆகியோர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு எ.வ.வேலு பதலளித்தார். அப்போது, “சென்னையின் தென் பகுதியில் அமைந்துள்ள கிண்டி நாகரெட்டி தோட்டத்தில் 7 ஏக்கர் வருவாய்த் துறையில் இருக்கும் இடத்தை மூன்று மாத காலத்துக்கு முன்பாக நானும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் இந்த இடத்தை ஆய்வு செய்தோம். சென்னையின் தென் பகுதிகளில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றான இந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் ஆகும். இந்த இடத்தை எப்படியாவது பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சரிடம் மா.சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.

பெரும்பான்மையான திருமண கூடங்கள், சமுதாயக் கூடங்கள், சமூக நல நிகழ்ச்சிகள் அனைத்தும் அண்ணாசாலை தாண்டிய பகுதிகளில் தான் உள்ளது. ஆகையால், இந்த இடத்தில் பொதுமக்களின் சமூக நல நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக முதலமைச்சர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவைச் சந்தித்து CMDA துறையில் இருக்கும் நிதியினை பயன்படுத்தி இந்த கட்டிடத்தை அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த இடத்தை ஆய்வு செய்து அரசாங்கத்தின் முக்கிய விதிகளுக்கு உள் இந்த கட்டடத்தைக் கட்ட முடியுமா? என மற்ற அமைச்சர்களுடன் ஆய்வு செய்துள்ளோம். இங்கு ஒரே நேரத்தில் 2000 நபர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் கார் பார்க்கிங் அமைப்பதற்கும் வசதிகள் அமைக்கப்பட உள்ளது. வருடத்திற்கு 64 திருமண நாட்கள் ஆன்மீக வகையில் உள்ளது.

மேலும் பகுத்தறிவு நிலையில் திருமணம் செய்பவர்களுக்கு நேரம் இல்லை. தாம்பரம் மற்றும் சைதாப்பேட்டை சுற்றி உள்ள நபர்கள் திருமண நிகழ்ச்சிகள் அல்லது விருது நிகழ்ச்சிகள் அமைக்க உதவியாக இருக்கும். பொதுமக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் இந்த திட்டத்தில் பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பாகத் திட்ட மதிப்பீடு, தொகை ஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்” என எ.வ.வேலு தெரிவித்தார்.