எதிர்கட்சியாக செயல்படுவது சின்னம்மா தான்..! செல்லூர் ராஜூ முன்னிலையில் மோதல்..!

அதிமுக அணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சின்னம்மா தலைமையில் ஒன்றினைய வேண்டும் என்று குரல் கொடுத்து இதில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடைசியில் மதுரை அதிமுகவின் கள ஆய்வு கூட்டம் கைகலப்பில் முடிந்தது.

தமிழகத்தில் 2026 -ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவில் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கள ஆய்வுக்கு என்று தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, எஸ்பி வேலுமணி உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 11-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தற்போது திருநெல்வேலி, கும்பகோணம்,மதுரை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது இந்த கலாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை தாங்கி வருகின்றனர். அந்த வகையில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் இன்று காலை அதிமுக மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், கள ஆய்வுக் கூட்டம், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்களான அதிமுக கழக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் ஆர். விஸ்வநாதன், மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக அணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சின்னம்மா தலைமையில் ஒன்றினைய வேண்டும் என்று குரல் கொடுத்து பேசினார்கள். உடனே செல்லூர் ராஜூ எழுந்நிருச்சு இப்போதைக்கு எதுவும் பேசக்கூடாது கடைசியில் பார்த்துக்கலாம் என்று சொல்ல இதில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரு பிரிவு நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே திருநெல்வேலியில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி, மோதல் மற்றும் கும்பகோணத்தில் நிர்வாகிகள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மதுரையிலும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.