‘திமுகவுக்கும், ஜனநாயகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சி’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 53-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் காந்தி சாலையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது, எல்லா மாநிலத்திலும் ஒரு முதலமைச்சர் தான் இருப்பார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 4 முதலமைச்சர்கள் உள்ளனர். ஸ்டாலின் மட்டும் முதலமைச்சராக இல்லை. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பலர் முதலமைச்சர் போல் செயல்படுகின்றனர். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்த நான் பொதுச் செயலராக உள்ளேன். இதுபோல் வேறு எந்தக் கட்சியிலும் சாதாரண தொண்டன் உயர் பதவிக்கு வர முடியாது.
திமுகவில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உயர் பொறுப்புக்கு வர முடியும். கடந்த அதிமுக ஆட்சியை மோசமான ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆனால் எங்கள் ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. விலைவாசி உயராமல், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டோம்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில்தான் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாய பங்களிப்போடு இந்தத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத் தினோம். இந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட வண்டல் மண்ணை விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயன்படுத்திக் கொண்டனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தான் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துகொண்டு இருக்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி மட்டுமே மு.க.ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். தனக்கு பிறகு தனது மகன் அதிகாரத்துக்கு வர வேண்டும் என நினைக்கிறார். தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை.
அதிமுக இருக்கும் வரை கருணாநிதி குடும்பத்தில் இருந்து யாரும் அரசு உயர் பொறுப்புக்கு வர முடியாது. மிசாவின் போது பாதிக்கப்பட்ட பலர் திமுகவில் உள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பதவியில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்ஆகியுள்ளார். உதயநிதி மட்டும் அல்ல, அவரது மகன் இன்ப நிதி வந்தாலும் ஏற்போம் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார் திமுக ஒரு குடும்பத்துக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கப்பட்டு விட்டது. இதனைக் கூறுவதற்கு கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா?
இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை திமுக நடத்துவதாக ஸ்டாலின் கூறுகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துள்ளது. சிறப்பான ஆட்சி நடைபெறவில்லை. சிறப்பாக ஊழல்தான் நடக்கிறது. போதைப்பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு திமுக ஆட்சியில் மோசமான நிலையில் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக நல்ல கூட்டணி அமைத்து போட்டியிடும். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக அரசால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிமுகவின் பக்கம் உள்ளனர் என எடப்பாடி பழனிசாமி பேசினார்